Web Analytics Made Easy -
StatCounter
Home > இலங்கை > மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மூன்று மாதங்கள் இடைநிறுத்தம்

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மூன்று மாதங்கள் இடைநிறுத்தம்

மன்னார் மனித புதைக்குழியின் அகழ்வு பணிகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் விசேட சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட தரப்பினருடன் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மன்னார் மனித புதை;குழியின் அகழ்வு பணிகள் மறு அறிவித்தல் வரை கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூடத்தில் நடாத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாக வெளியான அறிக்கையின் பிரகாரம், இந்த மனித புதைக்குழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானவை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனித எச்சங்கள் கிறிஸ்த்துக்கு பின் 1477 – 1642ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்டவை என அந்த அறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு வெளியான அறிக்கை குறித்து ஆராய்ந்த மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான், அகழ்வு பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கடந்த 8ஆம் திகதி அறிவித்திருந்தார்.

இதன்படி, இந்த மனித புதைக்குழியின் அகழ்வு பணிகளை தொடர்வது குறித்து நேற்றிரவு வரை நீதவான் தலைமையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மன்னார் மனித புதைக்குழியிலிருந்து பெற்றுக் கொள்;ளப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள், பல்வேறு ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மன்னார் விசேட சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ, அந்த அறிக்கைகள் கிடைக்கும் வரை தீர்மானமொன்றை எட்ட முடியாதுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினாலும் குறித்த பகுதியில் ஆய்வுகள் நடாத்தப்பட்டிருந்ததாகவும், அந்த ஆய்வுகளின் அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் குறித்து தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் நேற்றைய தினம் வினவப்பட்டதாக சமிந்த ராஜபக்ஸ கூறினார்.

தமது திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட ஆய்வுகளில் பெறுபேறுகளை வெளியிட மூன்று மாதக் காலம் தேவை என இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கூறியுள்ளனர்.

இதன்பிரகாரம், மன்னார் மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகளை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக மன்னார் விசேட சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

அத்துடன், மன்னார் மனித புதைக்குழியில் அடையாளம் காணப்பட்டு, தோண்டி எடுக்கப்படாதுள்ள மனித எச்சங்கள், மூன்று மாத காலப் பகுதிக்கு அவ்வாறே வைக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் தோண்டி எடுக்கப்படாத பட்சத்தில், அவை சேதமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளமையினால், அவற்றை மீண்டும் புதைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமிந்த ராஜபக்ஸ கூறினார்.

இந்த நடவடிக்கைகளுக்காக மேலும் இரண்டு வார காலம் தேவைப்படுவதாக கூறிய அவர், இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மன்னார் மனித புதைக்குழியிலிருந்து இதுவரை 343 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 330 தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்பு கூடுகளில் 30, சிறார்களுடையவை என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேவேளை, அமெரிக்காவின் ஆய்வு கூடத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை மாத்திரம் அடிப்படையாக வைத்து, இந்த மனித புதைக்குழியின் காலத்தை நிர்ணயிக்க முடியாது என யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார்.

Leave a Reply